பழிக்குப்பழி - 250 ற்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கொன்ற குரங்குகள் -நிம்மதி இழந்து தவிக்கும் மக்கள்
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் லவூல் என்ற கிராமம் உள்ளது. இங்கு குரங்குகளும், நாய்களும் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. இங்கு வெறிபிடித்த 2 குரங்குகள் குட்டி நாய்களை பிடித்துக் கொண்டு மாடி மற்றும் மரங்களுக்கு மேல் சென்று வைத்துக் கொள்கின்றன. அங்கிருந்து குட்டி நாய்களை கீழே தூக்கி எறிந்து, அவற்றை கொன்று விடுகின்றன.
இது தொடர்ந்து நடைபெற்றதை பார்த்த கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டது. குட்டி நாய் என்று பாராமல் கொலைகார குரங்குகள் இப்படி அட்டகாசம் செய்கின்றனவே என்று கவலைப்பட்ட அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் உதவியோடு குரங்குகளுக்கு வலை விரிக்கப்பட்டது. இதில் அட்டகாசம் செய்த 2 குரங்குகள் பிடிக்கப்பட்டன. மேலும் சில குரங்குகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
குரங்குகள் கொன்ற நாய்க்குட்டிகளின் எண்ணிக்கை 250-ஐ தாண்டும் என்று சில தகவல்கள் கூறுகின்றன. குட்டி நாய்களை குரங்குகள் தேடித் தேடி வேட்டையாடுவதற்கு காரணம் இருப்பதாக லவூல் கிராம மக்கள் சொல்கின்றனர்.
அதாவது சில வாரங்களுக்கு முன்பாக, நாய்கள் கூட்டம், குட்டி குரங்கு ஒன்றை கடித்துக் கொன்று தெருவில் இழுத்துச் சென்றுள்ளன. இதைப் பார்த்த பின்னர்தான், குரங்குகள் கூட்டம் பழிக்கும் பழி வாங்கும் விதமாக நாய்க்குட்டிகளை போட்டுத் தள்ளி வருகின்றன.
இதேபோன்று நாய்களும் குரங்குகளை பதிலுக்கு பதில் தாக்கியுள்ளன.
இந்த சம்பவங்கள் லவூல் கிராம மக்களிடையே நிம்மதியை பறித்துள்ளது.