கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரகம் இன்று (19) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பிக்குகள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அத்துடன், அன்றைய தினம் அங்கு கூடாரம் அமைக்க முற்பட்டவேளை காவல்துறையினருக்கும் பிக்குகளுக்கும் இடையில் அமைதியின்மையும் ஏற்பட்டது.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டம்
இந்தநிலையில் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை தாம் குறித்த இடத்திலிருந்து நீங்கப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த குறித்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கடந்த 16 ஆம் திகதி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு முன்பாகக் கூடி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
எனினும், அந்தக் கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகத் தெரிவித்த அவர்கள், தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவிலேயே தங்கியிருப்பதாகக் கூறி சத்தியாகிரகத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |