2023 - 2024 வடகீழ் பருவ மழைக்கான எதிர்வுகூறல்
2023- 2024 இற்குரிய வடகீழ் பருவ மழைக்கான எதிர்வுகூறலை யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்டுள்ளார்.
நேற்றையதினம்( 08.10.2023) திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட எதிர்வுகூறல் வருமாறு,
வடகீழ்ப் பருவச் சராசரி மழை
1. இவ்வாண்டு எல்நினோ ஆண்டு என்பதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் வடகீழ்ப் பருவச் சராசரி மழையை விட(550மி.மீ.) 14%- 19% குறைவாகவே மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
2. எல்நினோ ஆண்டாக இருந்தாலும் இந்த ஆண்டும் வடகீழ் பருவக் காற்றுக் காலத்திலும் நான்கு முதல் ஆறு தாழமுக்கங்கள் தோன்றும் என எதிர்பார்க்கப்படுவதாலும், ஆறு சந்தர்ப்பங்களில் செறிவான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுவதாலும் இவ்வாண்டும் எமக்கு மூன்று சந்தர்ப்பங்களில் ( 1. நவம்பர் 20 முதல் டிசம்பர் 05 வரை 2. டிசம்பர் 10 முதல் 22 வரை 3. டிசமபர் 26 முதல் 2024 ஜனவரி 08 வரை- இத் திகதிகளில் இருந்து ஒரு சில நாட்கள் முந்தலாம் அல்லது பிந்தலாம்) வெள்ள அனர்த்தங்களுக்கான வாயப்புக்கள் உள்ளன.
3. இவ்வாண்டு இரண்டாவது இடைப்பருவ காலத்தில் கிடைக்க வேண்டிய சராசரி மழையின் 38% மட்டுமே கிடைக்கும்( இக்காலப்பகுதியில் இன்றுவரை (08.10.2023) கிடைத்திருக்க வேண்டிய மழையின் அளவு 80மி.மீ. கிடைத்திருப்பது 43 மி.மீ. )
4. இன்று முதல் (08.10.2023) 12.10. 2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
5. அதற்குப் பின்னர் இம்மாதம் 24ம் திகதிக்கு பின்னரே சற்று மிதமான மழை கிடைக்க தொடங்கும். அது 03.11.2023 வரை தொடரக்கூடும். (நவராத்திரியின் கும்பச் சரிவையொட்டி மழை கிடைக்கும் என்ற எமது உள்ளூர் அறிவின் நம்பிக்கை இம்முறையும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
6. காலநிலை மாற்றம் காலநிலைப் பருவகாலங்களின் தொடக்க காலம் மற்றும் முடிவுறும் காலங்களில் பாரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இவ்வாண்டு தென்மேற்கு பருவக்காற்று இலங்கைக்கு ஜூலை நடுப்பகுதியிலே வீசத் தொடங்கியது.
வழமையாக செப்டம்பர் 10ம் திகதியோடு விலக வேண்டிய தென்மேற்கு பருவக்காற்று ஒக்டோபர் 14ம் திகதிக்கு பின்னரே படிப்படியாக பின்வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ( ஆகவே கொழும்பு உட்பட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கன மழை இவ்வாரமும் நீடிக்கும்.)
7. எனவே வடகீழ் பருவக்காற்று நவம்பர் மாதம் 10 ம் திகதிக்கு பின்னரே இலங்கைக்கு ( திரு கோணமலையே வடகீழ் பருவக்காற்றின் முதல் வீசலை சந்திக்கும்) வீசத் தொடங்கும். 8. வழமை போன்று அல்லாமல் இம்முறை வடகீழ்ப் பருவக்காற்றின் காலம் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9. ஆகவே வடகீழ் பருவக் காற்றின் மழை நாட்கள் 21 முதல் 27 ஆகவே இருக்கும்.
நான்கு முதல் ஆறு தாழமுக்கங்கள்
10. இந்த ஆண்டு வட கீழ் பருவத்தில் நான்கு முதல் ஆறு தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் தோன்றும் வாய்ப்புள்ளது. ( இம் மாத இறுதியில் அரபிக் கடலில் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கங்களில் இரண்டு புயலாக மாறும் வாய்ப்புள்ளது. நாம் செய்ய வேண்டியவை
. விவசாயிகள் எதிர்வரும் 12.10.2023 வரையான காலப்பகுதியில் கிடைக்கும் மழையைப் பொறுத்து விதைப்புச் செயற்பாடுகளை தீர்மானிக்கலாம். ( யாழ்ப்பாண மாவட்டத்தின் பல விவசாயிகள் ஏறகெனவே கிடைத்த வெப்பசலன மழையை நம்பி விதைத்துள்ளார்கள். இன்று முதல் 12.10.2013 க் காலப் பகுதிக்குள் மழை கிடைக்காவிட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.)
2. நீண்ட கால நெல்லினங்களை விதைக்காது குறுங்கால விதையினங்களை விதைப்பதன் மூலம் 2024 ஜனவரிக்கு பின்னான காலப்பகுதியில் நீர்ப்பாசன நீரை எதிர்பாரக்க தேவையில்லை. அத்தோடு அடுத்த ஆண்டு சிறுபோக விதைப்பையும் இது பாதிக்கும்.
3. இயலுமானவரை சேற்று விதைப்புக்கான பெருமழையை எதிர்பாராது புழுதி விதைப்புக்கான சந்தர்ப்பங்களை பயன் படுத்துதல்.
4. ஒக்டோபர் 20ம் திகதிக்கு முன்பதாக எமது சூழலில் காணப்படும் மரங்களின் விதானங்களை குறைத்தல்/ கிளைகளை வெட்டுதல் வேண்டும். இதன் மூலம் கடும் மழை மற்றும் காற்றினால் அந்த மரங்களின் மூலம் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.
5. நீங்கள் அடிக்கடி நடமாடும் பகுதிளின் பள்ளமான பகுதிகளை அடையாளப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும்.
6. எதிர்வரும் 15.10.2023 க்கு முன்னதாக மழைக் காலம் ஒன்றை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் களை மேற்கொள்ளுதல் வேண்டும்.
7. அதிகளவு இடிமின்னல் நிகழவுகள் இடம்பெறும் வாய்ப்புள்ளதனால் அவற்றின் பாதுகாப்பு முறைகளை அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
8. எமது வீடு, தொழிலிடம், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற சேவைமையங்கள், எமது போக்குவரத்து பாதைகளில் உள்ள பட்ட மரங்கள், சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கம்பங்கள் போன்ற கன மழையால் அல்லது வேகமான காற்று வீசலால் ஆபத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு அறிவித்து அவற்றை அகற்றுதல்.