அதி அபாய வலயங்களில் அமைந்துள்ள 5,000க்கும் அதிகமான வீடுகள் : வெளியான தகவல்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 5,000க்கும் அதிகமான வீடுகள் அதி அபாய வலயங்களில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்த்தன (Asiri Karunawardena) இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அந்த மக்களுக்காகப் பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மண்சரிவுகள் பதிவு
அத்துடன், எதிர்வரும் வாரத்தில் இந்தத் தரவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும், ஆய்வுகளின் முடிவுகளுக்கு அமைய இந்தத் தரவுகள் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 'டித்வா' சூறாவளி காரணமாக நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பாரிய மண்சரிவுகள் பதிவாகியுள்ளன.
இதில் கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அதன்படி கண்டி மாவட்டத்தில் 363 பாரிய அளவிலான மண்சரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 162 பாரிய அளவிலான மண்சரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 219 பாரிய அளவிலான மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன.
ஆய்வு செய்ய நடவடிக்கை
குருநாகல் மாவட்டத்தில் 89 பாரிய அளவிலான மண்சரிவுகளும், கேகாலை மாவட்டத்தில் 79 பாரிய அளவிலான மண்சரிவுகளும், பதுளை மாவட்டத்தில் 312 பாரிய அளவிலான மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன.

இந்த நிலப்பகுதிகளில் வசித்த மக்கள் தற்போது வீடுகளை இழந்து பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர். அந்த மக்கள் வசித்த இடங்களை ஆய்வு செய்ய 50 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |