தொடர்ச்சியாக வெளிவரும் பத்மேவின் ஆயுதங்கள்: விசாரணைகள் மும்முரம்!
போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவருமான கெஹெல்பத்தர பத்மே என்பவரின் மேலும் இரு ஆயுதங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவருமான மந்தினு பத்மசிறி பெரேரா அல்லது கெஹெல்பத்தர பத்மே என்பவர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் மைக்ரோ வகையிலான துப்பாக்கியொன்று மற்றும் மெகசின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடரும் விசாரணை
அண்மையில் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து பேர் அந்நாட்டு காவல்துறையினர் மற்றும் பேலியகொடை மேற்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கெஹெல்பத்தர பத்மே குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த விசாரணைகளின் போது குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியொன்று கொஸ்கொடை பகுதியில் உள்ள குறுக்கு வீதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பத்மே வெளிப்படுத்திய நிலையில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
