மன்னார் வைத்தியசாலையில் தாய்-சேய் மரணம்! நீதியான விசாரணை கோரும் மஸ்தான் எம்.பி
மன்னார் பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) கடந்த செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்தின் போது மரணித்த தாய் மற்றும் சிசு தொடர்பில் உரிய விசாரணையை நடாத்துமாறு இலங்கை தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் (Kader Masthan) கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதுடன் மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அச்சமடைந்திருக்கும் மக்களின் அச்சத்தைப் போக்குமாறும் அவர் சம்பந்தபட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறான அசாதாரண சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாமல் உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தாய்மார் இறந்த சம்பவங்கள்
மேலும், மக்களுக்கு உயரியதும் பாதுகாப்பானதுமான சேவை கிடைப்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மன்னார் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்மார் இறந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கவலை அளிப்பதாகவும் நோயாளர்கள் தங்களது மருத்துவ தேவைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்வதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் அறிய முடிகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |