மற்றுமொரு சம்பவம் -வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற தாயும் மகளும் மாயம்
ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் கடந்த பதினேழு நாட்களாக தாயும் சிறு குழந்தையான மகளும் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் ஹங்குரன்கெத்த காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இருபத்தி இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயதும் ஏழு மாதமுமான மகள் தருஷிகா அபி ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.
வைத்தியசாலைக்கு சென்ற நிலையில்

சுகவீனமடைந்த நிலையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த பதினேழாம் திகதி ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு தனது குழந்தையுடன் சென்ற அவர் இது வரை வீடு திரும்பவில்லை என அவரது கணவர் மோகனசுந்தரம் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி பேருந்தில் ரிக்கிலகஸ்கட நகருக்கு மனைவி சென்றதாகவும், நகரில் அவரை பார்த்ததாக பலர் தன்னிடம் கூறியதாகவும் கணவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அங்குருவாதொட்ட பிரதேசத்தில் காணாமற்போன தாய் மற்றும் மகள் காட்டுப்பகுதியிலிருந்து நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.