வவுனியாவில் வீடொன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்பு…!
வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
இரத்தகாயங்களுடன் வீட்டில் வீழ்ந்து கிடந்த தாய்
இன்றையதினம் வீட்டில் தாயும் அவரது பெறாமகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் உறவினர் இருவர் இன்று மாலை குறித்த வீட்டிற்கு சென்றபோது தாய் இரத்தகாயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் மகன்
இதேவேளை குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த அலஸ்கிறின் வயது 60 என்ற பெண்ணும் அவரது பெறாமகனான அயந்தன் வயது 35 என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தடயவியல் காவல்துறையின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |