கிழக்கில் சிங்களவரை முதலமைச்சராக கொண்டுவர ராஜபக்சாக்கள் புதிய நகர்வு
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசாத ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவதற்கு அரசாங்கம் மறைமுக வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருவதாக தமிழத் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சித்தாண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இன்று நாங்கள் எதையும் செய்ய முடியாது உள்ளோம். எங்களிடம் எந்த அதிகாரமுமில்லை. இப்படி பயணித்தால் வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.
வடக்கு கிழக்கு என்று நாங்கள் பார்க்க முடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசங்கள்.
தமிழர்களின் மேச்சல்தரையான மயிலத்தமடு மாதவனை, கெவிலியாமடு திபுலான, வட்டமடு போன்ற அனைத்தையும் பிரித்து ஏனைய சமூகங்களுக்கு கொடுக்க முனைப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதனை எங்கள் மக்கள் உணரவேண்டும்.
இவற்றெல்லாம் மாற்றியமைக்க அரசியல் அதிகாரம் எங்களின் கைக்கு வரவேண்டும். காணி அதிகாரம், காவல்துறை அதிகாரம் எங்களுக்கு தேவை. காவல்துறை அதிகாரம் எங்களிடம் இருந்தால் நாங்கள் விடயங்களை கையாளுவோம்.
இப்போது எங்களின் பிரச்சினைகளுக்கு கொழும்பில் இருந்துதான் அறிவித்தல்கள் வருகிறது” எனக் கூறினார்.