உலக வல்லரசுகளின் போட்டியில் ஆசிய நாடுகளின் நகர்வு
உலக வல்லரசுகளின் போட்டியில் ஆசிய நாடுகள் பக்கம் சாய்வதைத் தவிர்த்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று (25) ஆரம்பமான ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது சர்வதேச மாநாட்டில் (Nikkei Forum) கலந்து கொண்டு சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அதிபர் இதனை கூறினார்.
ஜப்பானிய நிக்கேய் பத்திரிகை வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த மாநாடு இன்றும் நாளையும் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.
பிராந்தியத்தின் வகிபாகம்
பூகோள புவிசார் அரசியல் செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பிராந்தியத்தின் வகிபாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிய நாடுகள் குரல் எழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.
ஆசியாவின் பன்முகத்தன்மை, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் காரணியாகும் என்பதோடு அது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய உலகளாவிய சக்தியாகும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு ஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்கும் இந்து சமுத்திரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்திய அதிபர், ஆசிய-பசுபிக் பிராந்தியமானது ஒரு கட்டமைக்கப்பட்ட பிராந்திய அமைப்பாகும் எனவும் இந்து சமுத்திர வலயமானது வளர்ந்து வரும் பிராந்தியம் எனவும் குறிப்பிட்டார்.
1955 ஆம் ஆண்டு பெண்டுங்கில் நடைபெற்ற ஆசியா-ஆபிரிக்க உச்சி மாநாட்டிலும் இந்து சமுத்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திலும் இந்து சமுத்திர பிராந்தியம் அமைதிப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அதிபர் இந்தோ-பசிபிக் பிராந்திய தொடர்புகளை மேம்படுத்தும் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.