பழுதடைந்த ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்: போட்டுடைத்த அர்ச்சுனா!
தான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50 ஆயிரம் ரூபாவை வாங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம்(30) காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, டித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதற்கான நட்ட ஈடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான கொடுப்பனவு
அதன்போது, இலத்திரனியல் உபகரணங்கள் பாதிப்புக்கான 50ஆயிரம் ரூபா இழப்பீட்டிற்கு பதிவு செய்கின்றீர்களா? என பிரதேச செயலரிடம் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார். அந்த விண்ணப்ப படிவம் இருப்பதாகவும், அதனை வழங்கவில்லை எனவும் பிரதேச செயலர் கூறினார்.
அதனைதொடர்ந்து, கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “அந்த படிவங்களை வழங்கி மக்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குங்கள். தெற்கில் பலர் இந்த கொடுப்பனவுக்கான பதிவுகளை மேற்கொண்டு பணத்தினை பெறுகின்றனர்.
நானும் பழைய ஐபாட் ஒன்றினை காண்பித்து, அதற்குள் தண்ணீர் போனதாக கூறி 50ஆயிரம் ரூபாவை எடுத்தேன். நீங்களும் அவ்வாறு பொய்யாவது கூறி அந்த பணத்தை எடுங்கள்.
300 வீடுகளுக்கு பாதிப்பு என்று கூறி எனக்கு மக்கள் அழைப்பு மேற்கொண்டு கூறினார்கள். காணொளி, படங்கள் எதுவும் தேவையில்லை. உடனடியாக அந்த கொடுப்பனவுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுங்கள்” என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த சமூகமட்ட அமைப்பு ஒன்றின் பிரதிநிதி, குறித்த பதிவுகள் தொடர்பாக மக்களுக்கு சரியான விளக்கத்தை பிரதேச செயலகம் வழங்கவில்லை என்றும் கிராம சேவகர்கள் வீடுகளை வந்து பார்க்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |