கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் : நாமலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்துள்ள விசாரணைக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று (06) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் அன்றைய தினம் நாமல் ராஜபக்சவை சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்சவும், கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் நாமல் ராஜபக்ச கடந்த 3ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமான கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி அவரை சிறைச்சாலை காவலில் வைக்கவும், எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.
இதன் காரணமாகவே, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், ஏர்பஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் சிறைச்சாலை காவலில் இருந்த நாமல் ராஜபக்ச இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், ‘ஏர்பஸ்’ (Airbus) ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் காரணமாக, உயர் நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜானகி சிறிவர்தனவும் நீதிமன்றில் முன்னிலை
இதேவேளை குறித்த விசாரணை தொடர்பில் கடந்த 03ஆம் திகதி நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிறிலங்கன் விமான சேவைக்கான எயார்பஸ் வானூர்திகளைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரைத் தொடர்ந்து சிறைச்சாலையில் தடுத்து வைத்து எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 28ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பிணை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் காரணமாக அவர் தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தனவும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |