ஒரே நாளில் ஒரே பிரதேசத்தில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்புக்கள்!
முல்லைத்தீவிலும் அடுத்தடுத்து காஸ் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அதனடிப்படையில் புதுக்குடியிருப்பை தொடர்ந்து புளியமுனை, செம்மலை பகுதிகளிலும் காஸ் அடுப்பு வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று காலை 11 மணியளவில் காஸ் அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியிருந்த நிலையில் நேற்றய தினம் மாலை 6 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட புளியமுனை கிராமத்திலும் மற்றுமொரு காஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்றய தினம் இரவு 8 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட செம்மலை கிராமத்திலும் மற்றுமொரு காஸ் அடுப்பு வெடித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினமே முதலாவது வெடிப்பு சம்பவம் பதிவாகியதோடு தொடர்ச்சியான இந்த வெடிப்பு சம்பவங்கள் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது.

