முல்லைத்தீவில் அதிகரிக்கும் இளவயது மரணங்கள் : தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த மாணவி
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (12) பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத உயர்தர வகுப்பு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வீட்டில் பெற்றோர்கள், உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவு
வீட்டிற்கு வந்த தாய், தந்தையர் மகளை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் வருகைதந்து உடலத்தினை பார்வையிட்டார்.
அத்துடன் மாணவி தூக்கில் தொங்கிய வீட்டையும் பார்வையிட்டதுடன் தாய் தந்தையரிடம் விடயங்களை கேட்டறிந்து மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் உடலத்தினை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இளைஞர் ஒருவரை காதல் செய்துவந்த குறித்த யுவதி தனது காதலனுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய காலங்களில் இளவயது மரணங்கள், தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |