தொடரும் கையகப்படுத்தல்கள் - சர்வதேசத்திடம் துயர் துடைக்கக் கோரும் தாயக உறவுகள்!
முல்லைத்தீவு கேப்பாபுலவில் மக்களின் பூர்வீக காணிகளில் மீதமாகவுள்ள 71 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கேப்பாபுலவு கிராம மக்களின் காணிகளில் அமைக்கபட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராம மக்களின் பூர்வீக காணிகளில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்திலிருந்து இராணுவம் வெளியேறி தமது காணிகள் மீண்டும் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி படைத் தலைமையகத்திற்கு முன்னால் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
படைத்தலைமையகத்திற்கு முன்னால் போராட்டம்
இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான ஆறுமுகம் ஜோன்சன், கணபதிப்பிள்ளை விஜயகுமார் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவில் இராணுவம் அபகரித்து தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு தெரிவித்து கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக பிரதான நுழைவாயில் முன்பாக கடந்த 2017 மார்ச் மாதம் முதலாம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் பயனாக இரண்டு கட்டங்களாக கேப்பாபுலவில் ஒரு தொகுதி காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டன. எனினும் மீதமாக பாடசாலைகள், ஆலயங்கள், விளையாட்டு மைதானம், பொது மண்டபங்கள், மக்களின் வீடுகள் விவசாய நிலங்கள் என்பன இன்னும் விடுவிக்கப்படவேண்டிய நிலையில் அங்கு தொடர்ந்தும் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
71 ஏக்கர் நிலப்பரப்பு
இந்த நிலையில் மீதமாகவுள்ள 54 குடும்பங்களுக்கு சொந்தமான 71 ஏக்கர் நிலங்களை விட்டு படையினரை வெளியேறுமாறு வலியுறுத்தியே இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கருத்துத் தெரிவிக்கையில்,
“சொந்த நிலங்கள் இல்லாத நிலையில் நாம் சொல்லொனா துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். எமது காணிகளில் உள்ள வருமானங்களை படையினர் அனுபவித்துக் கொண்டு எம்மை நடுத்தெருவில் விட்டுள்ளனர்.
போர் முடிந்து 14 வருடங்கள் ஆகின்ற போதிலும் நாங்கள் அகதி வாழ்க்கையே வாழுகின்றோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிபர் கேப்பாபுலவு மக்களின் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.
இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தல்
காணி விடுவிப்பு தொடர்பிலும் அரசியல் தீர்வு தொடர்பிலும் பேசி வருவதாக நாம் அறிகின்றோம். ஆகவே எமது சொந்த நிலங்களுக்கு நாம் திரும்பி செல்வது தொடர்பிலும் அந்த காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேசம் இனியும் தாமதிக்காது கேப்பாபுலவு மக்களின் இந்த துயரை துடைக்க ஆவன செய்யவேண்டும்” எனவும் தெரிவித்தனர் .
இவ்வாறு மக்களின் போராட்டம் இடம்பெறுகின்ற நிலையில் அங்கு காவல்துறையினர் மற்றும் அரச, இராணுவ புலனாய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

















ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
