முச்சக்கர வண்டியில் ''மாவீரன் கர்ணன் '' எனும் வாசகம் - காவல்துறை எடுத்த நடவடிக்கை
மாவீரன் கர்ணன் என்ற வாசகம் அடங்கிய வடிவமைக்கப்பட்ட ஸ்டீக்கரை தனது முச்சக்கர வண்டியின் பின் புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேர் முல்லைத்தீவு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் மாவீரன் என்ற சொல் பதிக்கப்பட்டிருப்பதற்காகவே வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு காவல் நிலையத்துக்கு முச்சக்கர வண்டியோடு வருகைதருமாறு சகோதரர்களான புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மராசா பிந்துசன் (வயது 21) மற்றும் தர்மராசா கனிஸ்ரன் (வயது 19 ) ஆகியோரை முல்லைத்தீவு காவல்துறையினர் அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இருப்பினும், ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்துக்கும் குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் உடனடியாக தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்த நிலையில், உடனடியாக கைது நடவடிக்கையிலிருந்து பின்வாங்கிய காவல்துறையினர் போக்குவரத்து காவல்துறையினரின் கடமைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற 19 வயதான, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பாடசாலை மாணவனை நேற்று முந்தினம் மதியம் (09) கைது செய்து முல்லைத்தீவு காவல் நிலையத்தில் தடுத்துவைத்து நேற்று (10) மதியம் காவல்துறை பிணையில் விடுதலை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.