மாற்றுவீதியூடாகச் சென்று நில அளவீடு செய்ய முற்பட்ட அதிகாரிகள்- வீதிமறியல் போராட்டத்தில் மக்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோட்டாபய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக காலை 7 மணிக்கே நிலஅளவைத் திணைக்களத்தின் உயரதிகாரிகள் கடற்படை முகாமுக்குள் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அளவீடு செய்வதற்காக ஊழியர்களை ஏற்றிவந்த வாகனத்தை கடற்படை முகாமிற்கு செல்லவிடாது மறித்த பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளை அளவீட்டு பணியை நிறுத்துமாறு திருப்பி அனுப்பியிருந்தனர்.
போராட்டக்காரர்கள் கடற்படை முகாமில் இருந்த நில அளவைத் திணைக்கள உயர் அதிகாரியை வெளியே வருமாறு கூறி கடற்படை முகாமுக்கு முன்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து கடற்படை வாகனம் ஒன்றில் சென்று நில அளவைத் திணைக்கள ஊழியர்கள் கடற்படையினர் அழைத்து வந்துள்ளனர்.
போராட்டம் நடைபெறும் வீதியூடாக செல்லாது மாற்று வழியூடாக கடற்படை முகாமிற்கு சென்று நில அளவை பணிகளை மேற்கொள்ள முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வட்டுவாகல் பகுதியில் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியை மறித்து மக்களும் அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.













