திருட்டுத்தனமாக அளவிட்டு சுவீகரிக்கப்படும் தமிழர் தாயகம்!
முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டபாய கடற்படை முகாமுக்கான காணி சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று இரகசியமான முறையில் காணி அளவீட்டு பணிகள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பிலிருந்து சென்ற நில அளவை திணைக்கள அதிகாரிகளால் இரகசிய முறையில் காணி அளவீடு இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ளனர்.
தமிழர் தாயகம் சுவீகரிப்பு
அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பல தடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே 617 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவீட்டு நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இரகசிய அளவீடு
எனினும் நில அளவையாளர்கள் காணி அளவீட்டு பணிகளுக்காக வருகை தரவில்லை. இந்த நிலையில் இன்று காலை முல்லைத்தீவு நில அளவை திணைக்களத்திலிருந்து கடற்படை வாகனம் ஒன்றில் சென்ற சிறிலங்கா கடற்படையினர் எல்லைக்கற்கள் ஏற்றி சென்ற நிலையில் அளவீட்டு பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இதனையடுத்து குறித்த காணி உரிமையாளர்கள் கடற்படை முகாமுக்கு முன்னால் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.




