முள்ளிவாய்க்கால் பேரவலத்தை இளைய தலைமுறைக்கு கடத்தும் முகமாக ஊர்தி பவனி
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்டதனை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு பதினெட்டாம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம் பெறுவது வழக்கம்.
2009 ம் ஆண்டு இலங்கை இராணுவம் பல்வேறு நாடுகளினுடைய உறுதுணையோடு தமிழ் மக்களை கொன்றொழித்த தமிழின படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம் தோறும் மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம் பெற்று வருகிறது.
தமிழின படுகொலை நினைவேந்தல்
குறிப்பாக தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தகால பகுதியில் அனுபவித்த துன்பங்களையும் அதற்கு நீதி கோரியும் தொடர்ச்சியாக தமிழினம் பல்வேறு வகைகளிலும் போராடி வருகிறது.
இவ்வாறான பின்னணியில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரி பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான விடயங்களை முன்னெடுத்து வருகின்ற நிலைமையில் ஆண்டுதோறும் தமிழின படுகொலை நினைவேந்தல் வாரத்தில் தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் உணவு இன்றி மருந்தின்றி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்த போதும் மக்களினுடைய பசியாற்றிய முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வை தற்போது தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இளம் சந்ததியினருக்கு கடத்தும் முகமாக இந்த வரலாறுகளை பரப்புகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வரலாறுகள் எதிர்கால சந்ததிக்கு கடத்தப்படுவதன் ஊடாக எங்களுடைய நீதி கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டங்களை தொடர வேண்டும் என்கின்ற அடிப்படையிலே இவ்வாறு பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற வகையிலே இதன் ஒரு அங்கமாக முள்ளிவாய்க்காலில் நமது இனம் பட்ட வேதனைகளையும் இளம் சந்ததியினருக்கு கடத்த முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தி பவனி ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நாள் பயணம்
முல்லைதீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான செல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கப்பலடி பகுதியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகிய இந்த ஊர்தி பவனியானது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இருந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு நகரை வந்தடைந்து அங்கிருந்து முள்ளியவளை ஒட்டுசுட்டான் நெடுங்கேணி புளியங்குளம் ஆகிய பகுதிகளின் மக்கள் அஞ்சலிகள் செலுத்தப்பட்டு இன்று இரவு வவுனியாவை சென்றடைந்துள்ளது.
இன்று முதலாவது நாள் பயணத்தை நிறைவு செய்த இந்த ஊர்தி பவனி ஆனது நாளைய தினம் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்க இருக்கின்றது.
இந்த ஊர்தி பவனி ஊடாக தமிழ் மக்கள் மத்தியிலே இந்த இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை இந்த தமிழ் மக்களினுடைய பிள்ளைகள் எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊர்தி பவனி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட இருக்கின்றது குறிப்பாக மன்னார் கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு சென்று மீண்டும் கிளிநொச்சி மாவட்டம் ஊடாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முற்றத்தை 18 ஆம் திகதி வந்தடைந்து 18 ம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறுகின்ற மாபெரும் நினைவேந்தல் நிகழ்விலும் கலந்து கொள்கின்ற நிகழ்வு இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


