கேளிக்கை விருந்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
முள்ளிவாய்க்கால் கஞ்சி ஈழத் தமிழர்களின் வலி வார்த்தைகளால் சொல்லிக்கொள்ளமுடியாத ஒன்று. அந்த வலிகளை உணர்ந்தவர்களுக்கு அது மிகப்பெரிய ரணம் என்றே சொல்லலாம்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் வரலாற்றுத் துயராக நடந்து முடிந்துபோன முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து நீங்காத வடுவாக 14 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை இருக்கின்றது.
குறித்த துயர நாட்களில் எம் மக்கள் உயிர்வாழ்வதற்காக காய்ச்சி வழங்கப்பட்ட கஞ்சியைக் குடித்து பெருந்துன்பத்தோடு தம்மையும் பிள்ளைகளையும் காத்துக் கொண்டார்கள்.
தமிழ் மக்கள் விசனம்

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது வலிமிகுந்த தமிழர் வரலாற்றின் ஒரு அங்கமாகவே மாறியிருக்கின்ற சூழலில், புலம்பெயர்ந்த பருத்தித்துறை மக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கும் கோடைகால ஒன்றுகூடலில் தமது கேளிக்கை விருந்தில் ஆடம்பர உணவுகளோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற விடயத்தையும் இணைத்திருப்பது பெரு வேதனைக்குரிய விடயமென தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
ஒருவரின் வலிநிறைந்த நாட்களின் நினைவுகளை உங்கள் கேளிக்கை விருந்துகளின் ஒரு அங்கமாக மாற்றுவது முகம் சுழித்துக்கொள்ளவேண்டிய ஒரு நிகழ்வே.
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் புலம்பெயர்ந்தவர்களின் தியாகங்கள் அளப்பெரியது.
வெறுக்கத்தக்க செயல்

ஆனால் இப்படியான ஒரு சிலரின் செயற்பாடு ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த மக்களின் தியாகங்களின் மீதான அதிருப்தியை ஏற்படுத்தும் இந்தச் செயல் வெறுக்கத்தக்கதே.
முள்ளிவாய்க்கால் கஞ்சி உணவு அல்ல - அது எங்கள் உணர்வு. எங்கள் வலிகளை நினைவேந்தாவிடினும் பரவாயில்லை. தயவுசெய்து நிந்திக்காதீர்கள் என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.