தமிழினப்படுகொலை வாரம்: முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
முல்லைத்தீவு (Mullaitivu) கள்ளப்பாடு தீர்த்தகரை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றைய தினம் (16) முல்லைப் பங்கை சேர்ந்த பங்குத்தந்தைகள் மற்றும் புனித கார்லோ இளையர் ஒன்றிய ஏற்பாட்டில் முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தகரை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பாதிரியார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழினப் படுகொலை வாரம்
2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.
இதனனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்ப்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |