தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்...!
🛑 புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று (14-05-2026) காலை வவுனியாவை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை வந்தடைந்தது.
இதன்போது, வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது அஞ்சலியைச் செலுத்தியதுடன் அதனைத் தொடர்ந்து மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்துடன் நகர வீதியூடாகச் சென்ற ஊர்தி பவனியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Kabil Kabil



🛑 முதலாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் (14-05-2026) யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
சபை அமர்வின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பைச் சித்தரிக்கும் ஒளிப்படம் வைக்கப்பட்டு அதன் முன்பு பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலியைத் தொடர்ந்து அக வணக்கம் இடம்பெற்று வழமையான சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Thampithurai Piratheepan



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |