மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற கணவன்!
புத்தளம் வென்னப்புவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட வய்க்கால அலுதோட்டை பகுதியில் இளம் பெண்ணொருவர் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலைச் சம்பவம் நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் வட்டவளை பிரதேசத்தில் வசித்து வந்த சத்தியவேலு நதிகா என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல்கள்
திருமணத்தின் பின்னர் கணவருடன் ஹட்டன் வட்டவளை பகுதியில் வசித்து வந்த குறித்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன், கணவருடன் வாழ முடியாது என்று கூறி, பேக்கரி தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு கணவன் பலமுறை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூறியும், தன்னுடன் வாழ முடியாது எனக் கூறி மறுத்துள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு பல தடவைகள் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை, 2 மணியளவில், பேக்கரி வேலைக்கு சென்றபோது, அங்கு மறைந்திருந்த கணவர், மார்புப் பகுதி மற்றும் தலைப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தினார்.
காவல்துறை விசாரணை
இதில் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
