முத்துநகர் விவசாயிகள் 18 ஆவது நாளாகவும் இடைவிடா போராட்டம்
திருகோணமலை முத்துநகர் விவசாயிகள், தங்களின் 53 ஆண்டுகளாக பயிரிடப்பட்ட விவசாய நிலங்களை சூரிய மின் உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு வழங்கியதை எதிர்த்து, இன்று (04) சனிக்கிழமை 18-வது நாளாக தொடர்ச்சியான சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொத்தம் சுமார் 800 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதில், 200 ஏக்கர் நிலம் ஏற்கனவே சுத்தமாக்கப்பட்டு விவசாய குளங்கள் மூடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலத்தை மீட்டுத் தர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்யாகிரகப் போராட்டம்
இன்றைய போராட்டத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமும் இணைந்து “முத்துநகர் விவசாயிகளின் போராட்டத்திற்கு நாமும் ஒன்றிணைவோம்” என்ற பதாகைகளுடன் ஆதரவு தெரிவித்தது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் வரை பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். பிரதமர் 10 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதாக கூறியிருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
“அரசே எங்கள் வயிற்றுப் பசியை போக்கும் நிலத்தை மீட்டுத் தா; கம்பனிகளுக்காக எங்கள் வாழ்க்கையை கொள்ளையடிக்காதே” எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், நில மீட்பு மற்றும் நஷ்டஈடு வழங்கப்படும் வரை தங்கள் சத்யாகிரகப் போராட்டம் தொடரும் என உறுதியளித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



