பிரதமரிடம் நீதி கோரும் முத்துநகர் விவசாயிகள்... தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்!
திருகோணமலை முத்துநகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 12 ஆவது நாளாக இன்றும் (28) திருகோணமலை மாவட்ட செயலகம் முன் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் கொழும்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை (Harini Amarasuriya) சந்தித்த போது பத்து நாட்களுக்குள் தீர்வை வழங்குவதாக கூறியிருந்த போதிலும் இன்னும் காலக்கெடு நிறைவடைய 6 நாட்கள் மாத்திரமே உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“திருகோணமலை வளங்களை சூறையாடுவதை நிறுத்து“, ”வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி”, ”பிரதமரின் வாக்குறுதிக்கு 6 நாட்கள்” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு விவசாயிகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள், “கடந்த 53 வருடங்களாக பரம்பரை பரம்பரையாக செய்து வந்த எங்கள் விவசாய பூமியை எங்களுக்கு வழங்குங்கள்.
இந்திய கம்பனிகளுக்கு சூரிய மின்சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்ட விளை நிலங்களை மீளக் கொடுங்கள்.
பிரதமர் 10 நாட்கள் அவகாசம் கொடுத்த நிலையில் இன்னும் ஆறு நாட்களே மீதமுள்ளன. நல்லதொரு தீர்வை பிரதமர் எமக்கு வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.“ என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




