முத்துராஜா விவகாரம் - இலங்கை உறவை பாதித்துள்ளதா...! விளக்கமளித்த தாய்லாந்து
சிறிலங்காவிலிருந்து சிகிச்சைக்காக தாய்லாந்து நோக்கிப் பயணமான முத்துராஜா யானை தாய்லாந்தில் தரையிறங்கியது.
இந்நிகழ்வு தொடர்பில் பலதரப்பட்ட கேள்விகள் எழும்பியுள்ள நிலையில் சிறிலங்காவிற்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் விளக்கமளித்துள்ளார்.
சிறிலங்கா மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் அனைத்து மட்டங்களிலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் இல்லாமல் யானை முத்துராஜாவை தாய்லாந்திற்கு மாற்றும் பணி சாத்தியமாகியிருக்காது என்றார்.
அதுமாத்திரமல்லாமல் குறித்த கூட்டு நடவடிக்கையானது "தனித்துவம் வாய்ந்தது மாத்திரமல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் உறவு காலத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உறவாக திகழ்கிறது“ எனவும் அவர் கூறினார்.
யானை சம்பந்தப்பட்ட விவகாரம் இருதரப்பு உறவுகளை பாதித்ததாக வெளியான செய்திகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த வேளையிலேயே தூதுவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
அறிவுப்பரிமாற்றத்திற்கான தொடக்கம்
இது தொடர்பாக மேலும் அவர் விளக்குகையில்,
இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டதன் மூலம் எங்கள் இரு நாடுகளின் பரஸ்பர நன்மைகளுக்கான எதிர்கால ஒத்துழைப்பின் பகுதிகளை அடையாளம் காண முடிகிறது.
குறித்த நிகழ்வு எதிர்காலத்தில் இத்தகைய இன்னல்கள் உருவாகும் சந்தர்ப்பத்தில் நம் நாட்டிலேயே அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கான அறிவுப்பரிமாற்றத்திற்கான தொடக்கம் என்பதை நிரூபித்து நிற்கிறது என்றும் அவர் கூறினார்.
சிகிச்சையின் பின்னர் யானை சிறிலங்காவிற்கு திரும்புமா? என்று வினவப்பட்ட போது
முழுமையான மற்றும் வெற்றிகரமான சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து முத்துராஜாவின் புனர்வாழ்விற்காக மீண்டும் மாற்றப்படும் என்று பதிலளித்தார்.
"இந்த வேளையிலே யானையின் நல்வாழ்வில் கவனம் செலுத்துவோம், மேலும் விலங்குகளின் உரிமைகள் மற்றும் அவற்றைப் பராமரிப்பதில் அதிக விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது. என்ற உண்மையை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியிருக்கிறது“ என்று அவர் கூறினார்.

