யாழில் இடம்பெற்ற மர்மமான மரணம்: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்
யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகம் பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, நேற்றைய தினம் (23) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சுன்னாகம் (Chunnakam) - சூளானை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கோபிநாத் (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மர்மமான முறையில் மரணம்
சுன்னாகம் - சூளானை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபர் பிரசாதம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஆலயத்திற்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் மோட்டார் இயங்கவில்லை என கூறி, பிரசாதம் தயாரிப்பில் ஈடுபட்ட குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளார்.
போதனா வைத்தியசாலை
அங்கு சென்று பார்த்த அந்த நபர் சோதனை கருவியை எடுத்து வருமாறு வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
அவர் சோதனை கருவியை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தவேளை அவர் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவரது சடலம் தெல்லிப்பழை (Tellippalai) ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மரண விசாரணை
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |