ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆராயும் குழுவில் ஷானி அபயசேகர : நாமல் அதிருப்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஷானி அபயசேகரவை (Shani Abeysekara) நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து நாமல் ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) தளத்தில் நேற்று (23) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஷானி அபயசேகரவை நியமித்தமை கடும் கேள்விகளை எழுப்புகின்றது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை இந்த குழுவின் முக்கிய பொறுப்பிற்கு நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது.
The appointment of Shani Abeysekara to the team of Police officers studying the PCoI Report on Easter Sunday attacks raises serious red flags. It is completely inappropriate for someone who was not only involved in the original investigation but also named in the report and… pic.twitter.com/wQr7fHO5IE
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 23, 2025
இது வெறுமனே நடைமுறை ரீதியாக தவறான நடவடிக்கை மாத்திரமல்ல, இது ஒவ்வொரு நெறிமுறை தரத்தையும் மீறுவதாகும், இது செயல்முறையின் நம்பகத்தன்மை மீது இருண்ட நிழலை போர்த்துகின்றது.
சட்டரீதியான முடிவுகள் நியாயமான விதத்தில் எடுக்கப்படுவது மாத்திரம் முக்கியமானதல்ல, நீதித்துறையின் மீது மக்களிற்கு நம்பிக்கை ஏற்படுதவற்கு அவ்வாறான முடிவுகள் வெளிப்படையானதாக நியாயமானதாக எடுக்கப்பட்டதாக மக்கள் உணர்வதும் அவசியம்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர்
மக்களின் நம்பிக்கை ஏற்கனவே மிகவும் பலவீனமான நிலையில் உள்ள சூழலில் இவ்வாறான தீர்மானங்கள் சந்தேகம் மற்றும் ஏமாற்றத்தை ஆழப்படுத்தும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தருணத்தில் ஷானி அபயசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளில் முக்கியமானவராக காணப்பட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயும் காவல்துறை குழுவில் அவரையும் இணைத்திருப்பது, நியாயபூர்வமான கரிசனைகளை எழுப்புகின்றது.
பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி
குறிப்பாக அறிக்கையில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்போது ஷானி அபயசேகரவின் சமீபத்தைய அரசியல் அறிக்கைகள் இந்த விடயத்தை மேலும் குழப்பகரமானதாக்குகின்றது, அவரது பக்கச்சார்பினை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும் அதிகாரிக்கு அரசியல் தொடர்புகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுமக்களிற்கு எவ்வாறு நம்பிக்கை ஏற்படும். இது ஒரு கட்சி சார்ந்த விடயமல்ல, இது தார்மீக தெளிவு மற்றும் நிறுவன ஒருமைப்பாடு சார்ந்த விடயம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு வெளிப்படையான நம்பகமான நியாயமான செயன்முறை தேவை. அவ்வாறில்லையெனில் பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமல்ல பொறுப்புக்கூறல் என்ற கருத்திற்கே அநீதி இழைப்பதாக அமையும்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
