பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் : உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக நாமல் தெரிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ச குடும்பத்தினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகளின் போது, எழுத்து மூல சாட்சிகள் மாத்திரம் பரிசீலிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கு விசாரணைகளின் போது சாட்சிகள் நீதிமன்றில் முன்னிலையாக தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களும் அவரது சகாக்களுமே காரணம் என நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்கான உண்மையான காரணம் தொடர்பில் ஆழமாக ஆராயப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
அத்துடன், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சிறந்த இடம் நாடாளுமன்றம் எனவும் குறித்த விடயம் நாடாளுமன்ற விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம்
சட்டங்களை நிறைவேற்றுவது, அவற்றை ஆராய்வது உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் மன்னெடக்கப்படும் நிலையில், பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களும் நாடாளுமன்றத்தின் மூலம் ஆராயப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கலாமெனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
