இது எதிர்கால வெற்றிகளின் ஆரம்பமே..! இதற்காக நான் பாடுபட்டேன் - நாமல் சூளுரை
இலங்கை கிரிக்கட் அணியின் ஆசிய கிண்ண வெற்றியானது எதிர்காலத்தில் வரவிருக்கும் பல வெற்றிகளின் ஆரம்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் அமைப்பை ஏற்படுத்த பாடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
முறையை மாற்றாவிட்டால் வெற்றி சாத்தியமாகும்
இலங்கை கிரிக்கட் அணி அதிக வெற்றிகளை நோக்கி பயணிப்பதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர், வெற்றிக்கான திறமை தற்போது வீரர்களிடம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
யாராக இருந்தாலும், தற்போதுள்ள முறையை மாற்றாவிட்டால் வெற்றி சாத்தியமாகும் என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய போது தாம் ஒரு விளையாட்டு வீரராக இருப்பதால் நாட்டில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய முயற்சித்ததாகவும் அரசியல் இலாபங்களுக்காக அவற்றை செய்யவில்லை எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்திருந்தார்.

