பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் நாமல்!
புதிய இணைப்பு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (03) பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சற்றுமுன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ச
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
'கிரிஷ்' (Krrish) ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முன்னிலையாவற்காகவே நாமல் ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு
நாமலின் பிணை மனு : இன்று வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு
கிரிஷ் கொடுக்கல் - வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை மனு கோரிக்கை மீதான உத்தரவு இன்று (03) வழங்கப்படவுள்ளது.
அதன்படி, குறித்த மனு மீதான தீர்ப்பு நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.
தனது பெற்றோரின் நோய்நிலையைக் கருத்திற்கொண்டு தன்னைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி, நாமல் ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அலி சப்ரி தெரிவிப்பு
குறித்த மனு கடந்த 28 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான உதவிச் சட்டப் பணிப்பாளர் தனுஜா பண்டார, சந்தேகநபருக்குப் பிணை வழங்கப்படுவதால் விசாரணை நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்தார்.
அத்துடன் சந்தேகநபரின் தாயும் தந்தையும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதனால் இதனை விசேட சூழ்நிலைகளாகக் கருத்திற்கொண்டு சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறு நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
இந்தநிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த மனுவை ஆராய்ந்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அறிவிப்பதற்கு உத்தரவிட்டார்.

கொழும்பு, கோட்டை பகுதியில் உள்ள டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை பன்முகத் திட்டத்திற்காக கிரிஷ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதற்காக 100 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |