மோடி - ஜி ஜின்பிங் உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு பைடன் அழைப்பு
பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின் பிங், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கான முக்கிய மைல்கல்லாக இந்த உச்சி மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின் விவாதங்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.