நாளை தென்படவுள்ள உலகின் மிக அரிய சூரிய கிரகணம் : மேகங்களுக்கு மேல் இருந்து படமெடுக்க தயாராகும் நாசா!
உலகின் மிக அரிய சூரிய கிரகணம் (Solar Eclipse) நாளை (8) தென்படவுள்ள நிலையில், இந்த கிரகணம் தொடர்பான படங்களை மேகங்களுக்கு மேலிருந்து எடுக்க நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.
இதன்படி, நாசாவின் இரண்டு ஜெட் விமானங்கள் நாளை சூரிய கிரகணத்தை பின் தொடரவுள்ளன.
கிரகணத்தின் போது மட்டுமே சேகரிக்கக்கூடிய மதிப்புமிக்க தரவுகளை சேகரிப்பதற்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரிய கிரகணம்
உலகின் மிக அரிய சூரிய கிரகணம் நாளை தென்படவுள்ள நிலையில், இதனை காண உலகளாவிய ரீதியில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
எனினும், உலக நாடுகள் அனைத்திலும் குறித்த சூரிய கிரகணம் தென்படாது என்பதுடன் குறிப்பிட்ட நாடுகளில் மாத்திரமே தென்படுமென நாசா கூறியுள்ளது.
இந்த சூரிய கிரணகத்தின் போது, நிலவு, சூரியனை மறைக்கும் முழு சூரிய கிரகண காட்சி 4 நிமிடங்கள் மற்றும் 27 விநாடிகளுக்கு மாத்திரமே தென்படவுள்ளது.
நாசாவின் திட்டம்
இந்த நிலையில், மேக கூட்டங்கள் சூழ்ந்தால் இந்த அரிய சூரிய கிரகணத்தை பார்வையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மேகங்களுக்கு மேலிருந்து குறித்த சூரிய கிரகணத்தை பார்வையிடவும் அவற்றை படமெடுக்கவும் நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கமைய, நாசாவின் இரண்டு ஜெட் விமானங்களில் மேகங்களுக்கு மேல் சென்று சில விஞ்ஞானிகள் இந்த அரிய சம்பவத்தை காணவுள்ளனர்.
சிறந்த படங்கள்
கிரகணத்தின் மேற்பரப்பில் இருந்து 15 ஆயிரம் மீட்டருக்கு மேல் இந்த ஜெட் விமானங்கள், அனைத்து மேகங்களுக்கும் மேலாகவும் வளிமண்டலத்தின் பெரும்பகுதிக்கு மேலாகவும் பறக்கவுள்ளன.
இதன் மூலம், சூரிய கிரகணத்தின் சிறந்த படங்களை எடுக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பூமியில் இருந்து நான்கரை நிமிடங்களுக்கு மேல் குறித்த சூரிய கிரகணத்தை காண முடியாவிட்டாலும், விமானத்தில் உள்ள கருவிகள் மூலம் 6 நிமிடங்கள் 22 விநாடிகளுக்கு அதனை காண முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |