வேலைவாய்ப்பு மோசடி - வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் எச்சரிக்கை
விசா ஆலோசனை நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல பண மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Sri Lanka Bureau of Foreign Employment - SLBFE) தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் காவல்துறை பிரிவினரால் சுற்றிவளைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
36 இலட்சம் ரூபாவை மோசடி
ஜா-எல, கட்டான பகுதியில் இயங்கிய நிறுவனம், ருமேனியாவில் லொறி சாரதி வேலை பெற்றுத்தருவதாகக் கூறி களனி மற்றும் வேயங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த இருவரிடமிருந்து 36 இலட்சம் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பில் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரும் அவருக்கு உதவிய பெண்ணும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நீர்கொழும்பு பகுதியில் ‘A & T Consultants’ எனும் பெயரில் இயங்கி, சமூக வலைத்தளங்கள் ஊடாக கனடாவில் தாதிப்பணி பெற்றுத்தருவதாகக் கூறி 55 இலட்சம் ரூபாவை மோசடி செய்த மற்றுமொரு நிறுவனமும் கடந்த 17ஆம் திகதி முற்றுகையிடப்பட்டது.
இதன் உரிமையாளர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், 250,000 ரூபாவை செலுத்துவதற்கு இணங்கியதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |