வைத்தியர் மற்றும் தாதியர் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை
இலங்கையில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 - 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் எனவும் இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதார துறையை மேம்படுத்தி அதனை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் இலகுக் கடன் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்காக நேற்று (22) இடம்பெற்ற நிகழ்விலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அதிபர் கோரிக்கை
அத்துடன் வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம் தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலை (NSBM) மற்றும் பசுமை பல்கலைக்கழகத்திற்கான வைத்தியசாலை ஒன்றை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் லயிசியம் பல்கலைக்கழகமும் அதற்கான கோரிக்கையை விடுத்திருப்பதாக அதிபர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு
அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களையும் வைத்திய துறைக்குள் உள்வாங்கி நவீன வைத்திய முறைமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அதிபர் வலியுறுத்தினார்.
யாழ். பருத்தித்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தமைக்காக நெதர்லாந்து அரசாங்கத்துக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |