நீர்கொழும்பு பள்ளிவாசல்கள் தேவாலயங்களிலும் கருப்புக் கொடிகள்!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு நகரின் பல இடங்களிலும் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டள்ளன.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் அண்டகை இதற்கான வேண்டுகோளை விடுத்திருந்தார். அதற்கமைய வீடுகள், தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், வீதிகள், கடைகள், வீதியோர கத்தோலிக்க சுருவங்கள் ஆகிய இடங்களில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
அத்துடன் இதுதொடர்பான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளும் பல இடங்களில் காண முடிந்தது. நீர்கொழும்பு தளுபத்தை அந்தோனியார் தேவாலயம், பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல், பெரியமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
அத்துடன் கட்டுவபிட்டிய வீதி, பெரியமுல்லை பிரதேசம், நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களிலும் மேரிஸ்டெல்லா கல்லூரி முன்பாகவும் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.