பற்றி எரியும் நேபாளம் - உயிருடன் எரிக்கப்பட்ட Ex பிரதமரின் மனைவி: பதற வைக்கும் காட்சிகள்
நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை முதல் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நேபாளத்தின் காத்மாண்டு, போகாரா, புட்வால், பைரஹாவா பரத்பூர், இட்டாஹரி மற்றும் டமாக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேபாள ஜென் சி (Gen Z) எனப்படும் தலைமுறையினரின் தொடர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கலவரமாக வெடித்துள்ளதுடன் அந்நாட்டு தீப்பற்றி எரிந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில், நேபாளத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை நேற்று (09) இரவு 10 மணி முதல் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பதவி விலகல் செய்த பிரதமர்
அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக நேபாள இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து பதவி விலகல் செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஒலி நாட்டைவிட்டு வெளியேறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தும் 73 வயதான நான்கு முறை பிரதமரான கே.பி. ஒலியின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. நாடு முழுவதும் அரசு கட்டடங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.
காத்மாண்டுவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கும் தீ வைத்துள்ளதுடன் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன.
நேபாள அமைச்சர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மனைவி போராட்டக்காரர்களால் எரித்துக் கொலை
இதற்கிடையில், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ராகர் நேற்று செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்களால் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் போராட்டக்காரர்களால் அவரை வீட்டில் அடைத்து வைத்து தீயிட்டு எரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்ஷ்மி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
