வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் வருகையை நிராகரித்தது நேபாள அரசு!
இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்ப முன்வந்த விசேட தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது.
இருப்பினும், சர்வதேச நிதி உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிட நேபாள அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாட்டு மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்த நிலையில் நேபாள வெளியுறவு அமைச்சகம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
மீட்புக் குழுக்கள்
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின் போது 34 நாடுகளைச் சேர்ந்த 76 இற்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புக் குழுக்கள் ஒரே நேரத்தில் நேபாளத்திற்கு வந்தன.
இதனால் விமான நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வெவ்வேறு நாடுகளின் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைப்பதில் மிகப்பெரிய குழப்பமும் முரண்பாடுகளும் உருவாயின.

அந்த அனுபவத்தை மனதில் கொண்டே இம்முறை உள்நாட்டுப் படைகளை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உதவிகள் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க பிரதமரின் நிவாரண நிதி என்ற ஒற்றைச் சாளர முறைமை மூலமாக மட்டுமே நிதி உதவிகளைப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை மீட்பு, தற்காலிக பாலங்கள் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற விசேட தொழில்நுட்ப உதவிகளுக்கு மட்டும் இந்தியாவிடமிருந்து நேபாளம் தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |