நேபாள வெள்ள அனர்த்தம்: ஐ.நா. காலநிலை நிதியத்திலிருந்து 20 மில்லியன் டொலர் உதவி
சீனாவின் திபெத் பிராந்திய எல்லையை அண்மித்த பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை இழப்பு மற்றும் சேத நிதியத்திலிருந்து நேபாளத்துக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 1,500 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,000க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ தரவுகளின்படி, 15,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60,000 பேர் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4.7 பில்லியன் அமெரிக்க டொலர்
வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் மற்றும் 13 நீர்மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கு சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட அரசாங்க மதிப்பீடுகளின்படி, மீள்கட்டுமானச் செலவு 4.7 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஐ.நா. வழங்கும் உதவியானது வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்வதற்குத் தேவையான மொத்தத் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாகும்.
காலநிலை தொடர்பான அனர்த்தத்தால் ஏற்பட்ட கடுமையான சேதங்களைச் சமாளிக்க உதவும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக நேபாளத்தின் விவசாயம், வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
வெள்ளம் ஏற்பட்ட ஒரு வாரத்துக்கும் குறைவான காலப்பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதமே நேபாளம் இந்த உதவியைக் கோரி இழப்பு மற்றும் சேதங்களை எதிர்கொள்ளும் நிதியத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தது.
இதற்கிடையில், கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் தனது முதலாவது உரையை நிகழ்த்திய நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா, தனது நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை எனக் குறிப்பிட்டார்.
நேபாளத்தின் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் மிகக் குறைவாக இருந்தபோதிலும், இந்த வெள்ளத்துக்கு காலநிலை மாற்றமே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |