குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு: மீட்கப்பட்ட சடலங்கள்
குவைத்தின் Ali Sabah Al-Salem மற்றும் Al-Nahda ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இரண்டு இலங்கைப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்விரு மரணங்களும் சந்தேகத்திற்கிடமான மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாவது சம்பவத்தில், Ali Sabah Al-Salem பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைந்துள்ள சேமிப்பு அறையிலிருந்து இலங்கைப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சட்ட மருத்துவப் பரிசோதனை
குவைத் பிரஜை ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு பிறந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மரணம் சந்தேகத்திற்கிடமான மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் சட்ட மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, Al-Nahda பகுதியில் 1999ஆம் ஆண்டு பிறந்த மற்றொரு இலங்கைப் பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைத்த தகவலையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மரணத்திற்கான காரணத்தையும் சம்பவத்தின் பின்னணியையும் கண்டறிவதற்காக சடலம் சட்ட மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க தடயவியல் நிபுணர்கள், மருத்துவப் பரிசோதகர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |