இஸ்ரேலுக்கு சர்வதேச நெருக்கடி : பெஞ்சமின் நெதன்யாகு எடுத்த திடீர் முடிவு
காசா மீதான அணு ஆயுத மிரட்டலை அடுத்து இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதனால், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட கலாசாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூவை அமைச்சர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த மாதம் 7 ஆம் திகதி ஆரம்பித்து ஒரு மாதம் தொட்டுவிட்ட நிலையில், இதுவரை இஸ்ரேலில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் காசாவில் 9,500க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
அணு ஆயுத மிரட்டல்
இந்நிலையில், இஸ்ரேல் கலாசாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூ என்பவர் “காசா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும்" என தெரிவித்திருந்தார்.
அவரது பேச்சுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அணு ஆயுத மிரட்டலை அடுத்து இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நெருக்கடி அதிகரித்ததில், கலாசாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூவை அமைச்சர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமைச்சர் அமிஹாய் எலியாஹுவின் பேச்சு உண்மைக்கு புறம்பாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச சட்டத்தின்படி செயல்படுகின்றன. நாங்கள் வெற்றி பெறும் வரை இதனைத் தொடர்வோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.