10000 வங்கிக் கணக்கு இலக்கங்களை பயன்படுத்தி நிதி மோசடி! ஆரம்பமாகிறது CID விசாரணை
பல்வேறு நபர்களின் 10,000 வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பயன்படுத்தி, இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி மோசடிக் குழுக்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாடகைக்கு பெறப்பட்ட அல்லது பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட பிறருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் ஊடாக பரிமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், இலாபம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைத்துக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் மற்றும் தரகு பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து அவர்களின் வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரகசிய வங்கித் தகவல்கள்
இதன் பின்னர், குறித்த கணக்குகளுக்கு ஒரு தொகைப் பணத்தை வரவு வைத்து கணக்கு உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் குழுக்கள், அதன் பின்னர் அவர்களின் PIN இலக்கம் உள்ளிட்ட இரகசிய வங்கித் தகவல்களை தந்திரமாகப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் வங்கிக் கணக்குகள், கணக்கு உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் பாரிய நிதிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், தங்களது வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைத்து மோசடிகளுக்கு உதவி செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பலர் சட்டத்தின் முன் சிக்கியுள்ளள்ளனர்.
வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்துகொள்ளுமாறு பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை வெளியிட்டு, இந்த மோசடிகளுக்காக நபர்களை இணைத்துக்கொள்வதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை
குறித்த மோசடிக் குழுக்கள், தாங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுடன் தொடர்பு கொண்டு செயற்படுவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை கணக்கு உரிமையாளர்களுக்கு வழங்குவதாகவும் கூறி அவர்களை ஏமாற்றுகின்றனர்.

பின்னர், குறித்த வங்கிக் கணக்கு விபரங்கள் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் ஊடாக வெளிநாடுகளில் உள்ள மோசடிக் குழுக்களின் கைகளுக்குச் செல்வதாகவும், அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு நிதிக் குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளில் உள்நாட்டு வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ மோசடிகளுக்கு உதவி செய்தவர்களாகக் கருதப்பட்டு, சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, எந்தவொரு காரணத்திற்காகவும் தமக்குச் சொந்தமான வங்கிக் கணக்கை வெளிநபர்கள் அல்லது வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைப்பதன் மூலம் இணையவழி பண மோசடிகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக, எவ்வித தொடர்பும் இல்லாத நபர்களும் சட்டத்தின் முன் தண்டனை பெற நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23