கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய விமானப்படைத் தளபதி!
புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (30) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று முதல் நடைமுறையாகும் வகையில் இலங்கையின் 19 வது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
எயார் மார்ஷலாக பதவி உயர்வு பெற்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனந்த வித்தியாலயத்தின் முதலாவது விமானப்படைத் தளபதி
இவர் கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரும் இப்பாடசாலையில் இருந்து வந்த முதலாவது விமானப்படைத் தளபதியாகவும் கருதப்படுகிறார்.
அத்துடன் இவர் கம்பஹா பண்டாரவத்தை பராக்கிரம வித்தியாலயம், கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
1988 ஆம் ஆண்டு ஜெனரல் சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்பு குழு இலக்கம் 06 இல் இணைந்த உதேனி ராஜபக்ஸ, 1990ஆம் ஆண்டில் பட்டம் பெற்றதுடன் இலங்கை விமானப்படையில் விமானியாக இணைந்தார்.
விமானப் படைத் தளபதியாக நியமிக்கப்பட முன்னர் விமானப்படையின் இரண்டாம் நிலை அதிகாரியாக பதவி வகித்தார்.
இவர் தனது பணிக்காலத்தின் போது போர் விமானத்திலும் போக்குவரத்து விமானங்களிலும் விமானியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
