புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு தொடர்பில் வெளியான தகவல்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வரைவு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் இறுதி வரைவு இந்த வாரத்துக்குள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு (Harshana Nanayakkara) கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நிபுணர் குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை வரைவுசெய்வது தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு, கடந்த தினம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் கூடியபோது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதிய சட்டமூலம்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”புதிய சட்டமூலத்தில் இடம்பெறும் பிரச்சினைக்குரிய இடங்களை தொடர்ந்தும் இனம்கண்டுகொண்டு, சட்டமூலத்தை இரண்டாவது தடவையாகவும் ஆராயும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதுடன் தற்போது அது நிறைவடையும் தருணத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
சட்டமூலம் தொடர்பில் குழு தொடர்ந்து கலந்துரையாடி வருவதுடன், நாளாந்தம் கலந்துரையாடி ஏற்படுத்திக்கொள்ளும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு சட்டமூலத்தை வரைவு செய்யும் நடவடிக்கையை, சட்ட வரைவு திணைக்களத்தினால் மேற்கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்ட ஜனரால் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளே, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மேலதிக செயலாளர் பியமுன்தி பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உள்ளிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
