நாமலுக்கு எதிராக புதிய வழக்கு! சாட்சியமளிக்கத் தயாராகும் நெருங்கிய சகா
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் ஏர்பஸ் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக நிமல் பெரேரா குறித்து முன்வைக்கப்பட்ட பிரமாண பத்திரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
வழக்கு ஒன்று: ஏர்பஸ் ஊழல்
நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி
நாமல் ராஜபக்சவின் சகாவான, விக்டோரியா மாநிலம் மெல்போர்னில் வசிக்கும் சட்டத்தரணி இந்திக கருணாஜீவா, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜபக்சவின் நீண்டகால நண்பரான நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ராஜபகசவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலமும் அளிக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கருணாஜீவா, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 என்ற முகவரியில் இயங்கும் ISK Law நிறுவனத்தின் பிரதான சட்டத்தரணியாக உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
தோல்வியடைந்த முயற்சி
நன்கு அறிந்த வட்டாரங்களின் தகவலின்படி, கருணாஜீவாவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் செய்த தொலைபேசி அழைப்புகளுக்கு பெரேரா பதிலளிக்கவில்லை என்றும், குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிப்பதைத் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்சவை மிகவும் அதிருப்தியடையச் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
CID அதிகாரிகள் அவுதிரேலியா பயணம்
இந்த விவகாரம் தெரியவந்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவுதிரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடமிருந்து சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டத்தரணி ஒருவரின் கூற்றுப்படி, நிமல் பெரேராவுக்கு சாட்சி பாதுகாப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்க அவுதிரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் அவுதிரேலியாவில் இருந்தபடியே Zoom வழியாக சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச பரஸ்பர சட்ட உதவி
அவுதிரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் விசாரணைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும், விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் முக்கிய அம்சமாக Airbus நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவதற்கான நடவடிக்கை அமைந்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு தகவல் வட்டாரம் இந்த வழக்கு வலுவான நிலையில் இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான மேலும் பல ஆதாரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கு இரண்டு: கிரிஷ் விவகாரம் நிதி முறைகேடு
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை
இரண்டாவது வழக்கு, ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் தொடர்பானது.

இந்தப் பணம் Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த நிதி நாமல் ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி தொடர்பாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார். இந்தப் பணப் பரிவர்த்தனையின் ஓட்டம் தொடர்பான முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாக நிமல் பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |