இந்த வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு - தீவிரமாக செயற்படும் அரசாங்கம்!
புதிய அரசியலமைப்பை இந்த வருடத்திற்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டுவருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரி பீடத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்திருந்த அவர், ஊடகங்கள் தொடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
"புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றது. முழு அளவில் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான வேலையினை அரசியலமைப்பு உருவாக்கக் குழு மேற்கொண்டு வருகின்றது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் விருப்பு வாக்கு முறையானது மிகவும் ஆபத்தானது. இதனை மாற்றியமைக்க வேண்டும். துஸ்பிரோகத்துடன் நேரடியாக தொடர்புபட்டது. அதனை மாற்ற வேண்டும் என்பதே நாட்டில் உள்ள சகல தரப்பினரதும் விருப்பமாகும்.
புதிய அரசியலமைப்பினை, அரசியலமைப்பு உருவாக்கல் குழு மாத்திரம் உருவாக்கிட முடியாது. அவர்களினால் யோசனைகள் முன்வைக்கப்படும். அதனையடுத்து நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து, வாத பிரதிவாதங்களை அடுத்து அது நிறைவேற்றப்படும். புதிய அரசியலமைப்புக் குறித்து நாடாளுமன்றமே இறுதி முடிவினை எட்டும்.
அது அரசியல் முடிவு. இந்த வருடத்திற்குள் புதிய அரசியமைப்பைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது" என மேலும் தெரிவித்தார்.
