பூமியையொத்த புதிய கிரகம்: வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்
சூரிய குடும்பத்திற்கு (Solar System) அருகில் பூமியை விட இரு மடங்கு பெரிய பூமியை ஒத்த கிரகமொன்றினை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூரிய குடும்பத்திற்கு அப்பால், உயிரினங்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் தொடர்பில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது சூரிய குடும்பத்திற்கு அருகிலேயே மற்றொரு பூமியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புதிய கிரகம்
குறித்த கிரகமானது நமது பூமியில் இருந்து சுமார் 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் அடர்ந்த வளிமண்டலத்துடன் இருப்பதாகவும் பூமியை விட எட்டு மடங்கு எடை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கிரகத்திற்கு சூப்பர் எர்த் (super Earth) என்றும் 55 கேன்கிரி இ (55 Cancri e) என்றும் பெயர் சூட்டியுள்ள விஞ்ஞானிகள், இது ஒரு நட்சத்திர மண்டலத்திற்கு அருகில் மிகவும் ஆபத்தான முறையில் சுற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
பிற வாயுக்கள்
நமது பூமி ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகும் நிலையில், விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ள சூப்பர் எர்த் வெறும் 18 மணி நேரத்தில் தனது சுற்றுவட்டப்பாதையை நிறைவு செய்வதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், சூப்பர் எர்த்தின் வளிமண்டலம் கார்பன் டை ஆக்ஸைடு(Carbon dioxide) அல்லது கார்பன் மோனாக்சைடு(Carbon monoxide) நிறைந்ததாக இருக்கலாம் என்றும் மற்றும் நீராவி மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு(Sulfur dioxide) போன்ற பிற வாயுக்களை கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பல்வேறு கிரகங்கள்
நமது பூமியைப் போலவே நிரந்தரமாக பகலிரவை கொண்டிருக்கும் இந்த கிரகத்தின் மேற்பரப்பில் மக்மா பெருங்கடல் சூழ்ந்திருந்தாலும், அதன் கொதிநிலை 4,200 டிகிரி பாரன்ஹீட் என்பதால் இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்பு இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும், அடர்த்தியான வளிமண்டலத்துடன் கூடிய இந்த கிரகத்தை கண்டுபிடித்திருப்பதன் மூலம் பால்வெளியில் இதுபோன்று பல்வேறு கிரகங்கள் இருப்பதற்கான சாத்தியங்களை ஆராய உதவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சூப்பர் எர்த் கிரகத்தை ஆராய்வதன் மூலம் நமது பூமி மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களின் ஆரம்ப காலக்கட்டங்களை அறிந்து நுண்ணறிவு பெற உதவும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |