இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த மற்றுமொரு நாடு
இலங்கையின் (Sri Lanka) - கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்தின் (Switzerland) - சூரிச்சிற்கும் இடையிலான புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் குறித்த விமான சேவை நேற்று (01.11.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 251 சுற்றுலாப் பயணிகளுடன் edelweiss விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று (01) இலங்கையை வந்தடைந்தது.
புதிய விமான சேவை
கூதிர்காலத்தின் வருகையுடன், சூரிச் (Zürich) மற்றும் கட்டுநாயக்க இடையே தொடங்கிய புதிய விமான சேவையின் முதல் விமானமான Edelweiss விமான நிறுவனத்தின் WK68 கொண்ட A330 விமானம் நாட்டை வந்தடைந்தது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இந்த விமானம் சூரிச்சிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு (Bandaranaike International Airport) வருகைதந்து அதே நாளில் மாலைதீவு (Maldives) தலைநகரான மாலே வழியாக சூரிச் நோக்கி பயணிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சேவை இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1,016,256 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,484,808 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேலும், 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 1,484,808 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |