சிறிலங்காவில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி - நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
மக்கள் தகவல் அறியும் உரிமையை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தின் ஊடாக, ஊடகங்களுக்கான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் நிலைப்பாட்டிலேயே இதுதொடர்பில் பேசப்படுகின்றது.
சட்டமூலத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை உப குழு ஏற்கனவே அடிப்படை சட்டத்தை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அக்குழுவின் தலைவரான அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச நேற்று(30) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சட்டரீதியிலான அனுமதி பத்திரம்
இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“இச்சட்டமூலத்தை நாம் நிறைவுசெய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.
அனைவரும் சேவையை ஒரே முறையில் மேற்கொள்வதற்கு உரிய சட்டரீதியிலான அனுமதி பத்திரமொன்றை வழங்குவதுடன், அந்த நிறுவனங்களுக்கிடையே சம அளவில் நிபந்தனை அல்லது நடைமுறை இருக்க வேண்டும்.
குறித்த நிறுவனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதனையும் தடுக்க வேண்டும். இதற்கமைவாகவே நாம் ஏற்பாடுகளை தயாரித்துள்ளோம், இது ஒருபோதும் ஊடகங்களை ஒடுக்குவதற்கான முயற்சியல்ல” என தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சியா
இதுகுறித்து சிவில் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைசட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும், அரசாங்கத்தின் திருட்டு குண்டர்களை அம்பலப்படுத்தும் ஊடகங்களை ஒடுக்க முயற்சித்தது.
ஆனால், உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எழுந்த பாரிய எதிர்ப்பின் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தை ஒத்தி வைக்க வேண்டி நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்காணும் முயற்சியின் மூலமாக கட்டுப்படுத்த முடியாமல் போன ஊடக சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சியே ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் கொண்டு வர காரணம் என புலப்படுவதாக” தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்கள் தகவல் அறியும் உரிமையை தடுப்பதற்கா அரசாங்கம் முயற்சிக்கின்றது ? என்பதனை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என சட்டதரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.