ஊடக அடக்குமுறைகளை நிறுத்துங்கள்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் காட்டம்
பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி, ஆட்சியாளர்களை முறையாக வழிநடத்துகின்றமையால் தான் ஊடகங்கள் ஒரு நாட்டின் நான்காவது அரசாங்கமாக கருதப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் பேச்சு சுதந்திரத்திற்கும், ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே.
எவ்வாறாயினும், சமீபகால வரலாற்றில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்கள் கடந்த 2005-2015 கால மனிதாபிமானமற்ற ஆட்சியின் போதே இடம் பெற்றன.
இதன்படி, குற்றவாளி இல்லாமல் காணாமல் ஆக்கப்படல் என்றும், பல ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் தாக்கப்பட்டு என்றவாறும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை, தர்மரத்தினம் சிவராம் படுகொலை, பிரதீப் எக்னலிகொட கடத்தல்,போத்தல ஜயந்தவை கடத்திச் சென்று சித்திரவதை செய்தது, மந்தனா இஸ்மாயிலுக்கு மிரட்டல் விடுத்தமை, சுப்பிரமணியம் இராமச்சந்திரன் கடத்தல், கீத்னோயர் கடத்தல், உபாலி தென்னகோனை தாக்கியது மற்றும் சிரச, சியத ஊடக வலயமைப்புகள் மற்றும் உதயன் மீதான தாக்குதல் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் அவற்றில் சில மாத்திரமே.
2019 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த, இந்த சகிப்புத்தன்மையற்ற மற்றும் மாற்றுக் கருத்துகளை ஒடுக்கும் ஒற்றைக் கொள்கையை கடைப்பிடிக்கும் அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை ஒடுக்கி, மக்களின் கருத்து சுதந்திரத்தை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கட்டுப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறெனில்,
•அடையாளம் தெரியாத குழுக்கள் மற்றும் தீவிரவாத குழுக்களால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளல்.
•குற்றப்புலனாய்வுத் திணைக்களம் போன்ற சட்டப்பூர்வமான நிறுவனங்களை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை மிரட்டுதல்.
•அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் பேச்சு சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகளை விதித்தல், போன்ற மேற்கண்ட முறையில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற முறைகளை பயன்படுத்திய வண்ணம் ஊடகவியலாளர்களுக்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன.
லேக் ஹவுஸ் ஊடகவியலாளர் மதுக தக்ஷல பெர்னாண்டோ மீதான தாக்குதலுடன் இது ஆரம்பமானது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததற்காக ரம்சி ராசிக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டமை, ஊடகவியலாளர் சத்துரங்க அல்விஸ் கைது செய்யப்பட்டமை, கவிஞர் அஹ்னாப் ஜசீம் கைது, சிரந்த அமரசிங்க, சுதந்த திலகசிறி, அசேல சம்பத், ஷெஹான் மாலக மற்றும் மனோரம வீரசிங்க போன்ற சமூக ஆர்வலர்களை அடையாளம் காணப்பட்ட மற்றும் அடையாளம் காணப்படாத காரணங்களுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பது,
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் மூலம் மிரட்டல் விடுப்பது, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தாங்கள் செய்யாத குற்றங்களுக்காக கைது செய்யப்படுவார்கள் அல்லது அச்சுறுத்தப்படுவார்கள் என்ற பயத்தில் பல ஊடகவியலாளர்கள் இன்னும் நாட்டிற்கு வெளியயே இருக்கிறார்கள்.
மேலும், வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு, சமூக ஊடக ஆய்வாளர்கள் மற்றும் இணையதள செயற்பாட்டளர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்ப்பட்டுள்ளமை குறித்தும் ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளன.
தொழிற்சங்க மற்றும் தொழிற்சங்க தலைவர்களின் கருத்துக்களையும் அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஒடுக்கி வருகிறது. இணைய தளங்களை வெகுஜன ஊடக அமைச்சில் பதிவு செய்வதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி அறிக்கைகளை கோரும் நடவடிக்கையில் செயற்படுவதையும் காணமுடிகிறது.
ஊடக சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைக்கும் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டமை இங்கு உச்சளவு நடவடிக்கையாக அமைந்துள்ளது.
தகவல் பாதுகாப்பு சட்டமூலம் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதோடு, இது ஊடகவியலாளர்களின் தொழில் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் விவகாரமாக அமையலாம்.
பிற நாடுகளின் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களில் ஊடக சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத உட்பிரிவுகள் உள்ளன என்றாலும், இந்தச் சட்டத்தில் அவ்வாறு எத்தகைய உட்பிரிவுகளும் சேர்க்கப்படவில்லை.
இச்சட்டம் ஊடாக ஒரு சுயாதீனமற்ற நிறுவனம் தரவு பாதுகாப்பு ஆணையமாக நிறுவப்படுகிறது. ஒரு கோடி ரூபா வரை அபராதம் விதிக்க இந்த ஆணையகத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
மேலும், சமூக ஊடகங்களை மேலும் கட்டுப்படுத்துவதற்கு அவசர சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று சில அரசாங்க அமைச்சர்கள் நாட்டில் ஆபத்தான கருத்தியலை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
முன்னாள் ஊடகவியலாளர் ஒருவர் ஊடகத்துறை அமைச்சராக கடமையாற்றுகின்ற காலப்பகுதியிலயே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன.
இதன் பிரகாரம், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
1. வெகுஜன ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை சுபிட்சத்தின் தொலைநோக்கில் கூறப்பட்டுள்ளவாறு மேலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறதா?
2. அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையா?
3. 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரும் தற்போதும் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதோடு, இது இவ்வாறு நடப்பதற்கு அரசாங்கம் மற்றுக் கருத்துடையோரை சகித்துக்கொள்ளாததுதான் காரணமா? அனைத்து ஊடகவியலாளர்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் அரசாங்கத்தின் கருத்துக்களையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கருதுகிறதா?
4. 2015 க்கு முன் நிகழ்ந்த மற்றும் 2019 க்குள் முடிவுறாத ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு தொடருமா?
5. சமீபகாலமாக மீண்டும் எழுந்துள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், அழுத்தம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த சாதகமான நடவடிக்கைகள் என்ன?
6. தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் திட்டமிட்ட சமூக ஊடகக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் போன்ற சட்டக் கட்டமைப்பிற்குள் வரையறுத்து, ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கருத்துக்களை வெளியிடுவதை கட்டுப்படுத்துவது வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் பொருத்தமற்றது என்பதை நீங்கள் ஏற்கவில்லையா? அப்படியானால், அத்தகைய சட்டங்களுக்கு நீங்கள் ஏன் பரிந்துரை செய்தீர்கள்?